பேருந்து நிறுத்தத்தில்
இடமிருந்து வலம்,
வலமிருந்து இடம்-என
விழியுருண்டைகளை உருட்டும் போது
அவள் பார்வை
என் மீது படட்டும் என்று
நண்பர்கள் கூட்டத்தை விட்டு விலகி நிற்பேன்!
பேருந்தின் வருகையை எதிர்நோக்கும்-அவள்
கண்கள் என்னைக் கடந்து சென்றால்,
உன்னைப் பார்த்துவிட்டாள்,
இல்லை அது வெறும் பிரம்மை-என
புத்திக்கும் மனசுக்கும் சண்டை வந்துவிடும் !
இதனிடையே எவனோ ஒருவன்
நண்பன் என்று
அவளருகே நின்று கொண்டு
என் உயிரை எடுப்பான்.
அவனை அலாக்காக நகர்த்தி வைக்க
என் நண்பனுக்கு
கட்டிங் கரைக்ட் பண்ண வேண்டும்!!
வழக்கமாய் 5 மணிக்குத்தான் செல்வாள்,
என்
நான்கு மணி பேருந்துக்கு
வரயியலாத காரணமாய்
நான்காயிரம் பொய் சொல்லவேண்டும்,
நண்பர்களிடத்தில்.
நாலேகால் பேருந்தில் அவளேறிவிட்டால்??
அந்தோ, பரிதாபம் தான்.
கூட இருப்பவனும்
கூட்டம் நிறைந்த பேருந்தைக் கண்டால்
குதித்தெழுந்து ஓடிவிடுவான்.
இதிலருமை என்னவென்றால்,
அவளை விட
என்னை
அவள் தோழி தான் அதிகம் கவனிப்பாள்!!
தோழியின் கவனம் என் மீது இல்லாத போது,
கிள்ளப்படுவதன் காரணம்
என் மரமண்டைக்கு மெதுவாகத்தான் புரிந்தது
பலமுறை யோசித்து முடிவில்
அரைமனதோடு கையசைத்து
அசட்டுப் புன்னகையை விண்ணப்பமிட்டால்
வானையும் பூமியையும் பல முறை அளந்துவிட்டு
வெற்று முகத்தை மறுமொழியிடுவாள்.
5 மணி நெருங்கும் போது
நா வறண்டு நீருக்காக வெளிநடப்பு செய்யும்,
இதயத்துடிப்பு எண்ணூரை எட்டும்.
அவளைச் சுமந்து செல்லும்
பேருந்தின் பின்னாலே ஓடிப்போய் ஏறிவிடலாமா?
என்றெல்லாம் யோசனைவரும்!!
எதிரெதிர் பேருந்து நிறுத்ததில்
அறுபது அடி தூரத்தில் நின்று
பார்த்துக்கொண்டாலும்,
அவள் அருகாமையை உணராத இரவென்று எதுமில்லை.!
இரவென்று எதுமில்லை.!!
