மழைக்காலம்
.
பொடிசுகளெல்லாம் பறக்கவிட்ட காத்தாடியை
கறந்திழுக்க தெருத்தெருவாய்ச் சுற்றித்திரியும்,
நடுத்தரமெல்லாம்,
சாமியப்பன் கடையோரம் ஒதுங்கி,
உருமாலை, வேட்டி மடிப்பு, அங்கங்கே சொருகி வைத்திருக்கும்
அலீம் பீடியை இழுக்கும்.
எதிர்ப்படும் தேரை,தவளைகளைப் பொருட்படுத்தாது,
வானைச் சபித்துவிட்டு வேக நடையிடுவோரே!
பெருசுகள்.
காங்கேயம் கால்வாயில் விட்ட விரிசல் போல்,
ஓட்டைப் பிரித்துக் கொண்டொழுகும் நீரைச் சேகரிக்க
பாத்திரம் தேடுவராம் வீட்டு அம்மணிகள்.
ஓலைக் கீற்றின் வழி சொட்டும் மழைத்துளியை ரசித்தபடி,
கைதாங்கும் சூட்டில் உடனடி டிகாசன் டீ வாங்கி
அதை மழை நிற்கும் வரையருந்தும்.
இளசுகள்.
பழுதான சாக்கடையில் எகிறிக்குதித்து
ஓடியொளியும் எலிகளை துரத்தும்
வெள்ளை கருப்பு பூனைகள்.
நிமிடத்திற்கொருமுறை சிலிர்த்துக்கொள்ளும்
ஆட்டுமந்தையினூடே நகர மறுக்கும்
எருமைக்கோனான் என
அற்புதமாய் நிகழும் இந்த மழைக்காலத்தை
அனுபவிக்க, நமக்கு வேண்டும்
நகரமெல்லாம் மீண்டும் கிராமமாய்.

http://wp.me/pf7nD-8y